''மதுரை சாலச் சந்தை கிராமம் சொந்த ஊர். பள்ளிப்படிப்பு, டீச்சர் டிரெயினிங், பட்டப் படிப்பு முடித்து வேலைக்காகக் காத்திருந்தேன். எந்த வேலையும் கிடைக்கலை. சரி 'நாமே சுயமாக ஒரு வியாபாரம் செய்யலாம்’ என முடிவு எடுத்து நாலு வருஷம் தெருத் தெருவா ஐஸ் வியாபாரம் பண்ணினேன். கொஞ்சம் பணம் புரள ஆரம்பித்தது. பிறகு ஆசிரியர் வேலை கிடைத்தது. 12 வருஷம் சிவகாசியில் வாத்தியார் வேலை.என் தந்தையும் கவனகக் கலையில் சிறந்தவர். ஒரே நேரத்தில் பல விஷயங்களை கவனித்து, அதை மனதில் நிறுத்திகொள்வதற்குப் பெயர்தான் கவனகம். இதில் யாழ்ப்பாணம் கதிர்வேல் பிள்ளைதான் முன்னோடி. என் தந்தைக்குப் பிறகு இந்தக் கலையை யார் கையில் எடுப்பது என்ற கேள்வி எழுந்தபோது, 'இலக்கிய வீதி’ இனியவன், 'நீங்களே கையில் எடுங்க சுப்பு’ என்றார். எனக்கும் கவனகத்தில் ஆர்வமும், பயிற்சியும் இருந்ததால் களத்தில் இறங்கினேன். 1987-ல் திருக்கழுக்குன்றத்தில் என்னுடைய முதல் நிகழ்ச்சி. ஆரம்பத்தில் 10 கலைகளைச் செய்யும் 'தசாவதானி’யாக இருந்த நான், பயிற்சிக்குப் பிறகு குறள், எண், எழுத்து, பெயர், வண்ணம், கூட்டல், பெருக்கல், மாயக் கட்டம், படைப்பாற்றல், தொடு உணர்வு, ஒலி, கைவேலை, இசை, வினா-விடை விரிவுரை, கிழமை காணுதல், ஆங்கிலத் திருக்குறள் என 16 கவனகம் செய்யும் 'சோடசவதானி’யானேன்.
நிகழ்ச்சிகளுக்கு இடையே பல சுவாரஸ்யங்கள் நடக்கும். விழுப்புரம் பக்கத்தில் கண்டமங்கலத்தில் ஒரு நிகழ்ச்சி. 'வெண்பா கவனகம்’ வரும் போது, பார்வையாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து 'கவிக்கேது நாளை கணக்கு?’ என்று ஈற்றடி ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அந்த வரியை வைத்து நான் வெண்பா பாடணும். அதை அப்படியே நினைவில் வெச்சுகிட்டு மற்ற கவனகங்களை முடித்தேன். இறுதியில் அதே பார்வையாளர், 'நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லையே’ என்றார். அந்த வரியை வைத்து என்ன பாடுவது என்று தெரியாமல் விழித்தேன். அப்போது ஆலமரக் கிளையில் அமர்ந்திருந்த காகம், 'கா... கா...’ என கரைந்ததைக் கேட்டு, 'காக்கைக்கு ஏது கருவூலச் சம்பளம்/கூக்கூக்கூ கைக்கோ குழல்விளக்கு - ஆக்கும்/ புவிஉருவாக்கப் பொதுப்பணி செய்யும்/ கவிக்கேது நாளை கணக்கு?’ என்று ஒரு வெண்பாவைப் பாடினேன். நான் திணறிய நேரத்தில் அந்த காக்கை அடி எடுத்துக் கொடுத்தது.

இப்படிப்பட்ட அரிய கவனகக் கலையை இன்று பொறுமையா உட்கார்ந்து கேட்பதற்கோ, கற்பதற்கோ ஆள் இல்லை. இருந்தாலும் என்னால் முடிந்த அளவு ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறேன். 'நாம கத்துக்கிட்ட கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறோம்’ என்பது மட்டுமே எனக்கு சந்தோஷம் தரும் விஷயம்'' என்கிறார்.
- ந.வினோத்குமார், படங்கள்: வீ.நாகமணி
